Saturday, July 11, 2015

பிற்போக்கு தொழில்நுட்ப நிறுவனங்கள்

© https://en.wikipedia.org/wiki/SIPCOT_IT_Park

எதிர்காலத்தின் கதவுகளை தொழில்நுட்பச்சாவி கொண்டு திறந்து கொண்டிருக்கும் லட்சத்திற்கும் மேலான (அதில் 60 சதவிகிதத்திற்கும் மேல் இளைஞர்கள்) பணியாளர்களைக் கொண்டிருக்கும் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில், ஒரு மேலாளர் புதிதாக தன் குழுவில் சேரும் பணியாளரின் சாதி குறித்து வெளிப்படையாக விசாரிக்கிறார். எவ்வளவு கேவலமான, அநாகரீகமான பிற்போக்குத்தனம் இது!!!

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் சாதி, உருவ அமைப்பு, சமயம், பாலினம், பாலின சார்பு, ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடுத்தி நடத்துவது ஒன்றும் புதிதல்ல. ஐக்கிய அமெரிக்காவில் தலைமையகம் கொண்டு இந்தியாவில் கிளைகளை கொண்டுள்ள நிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் தங்கள் கொள்கைகளில் அனைத்துவிதமான பாகுபாடுகளுக்கும் எதிராகத்தான் இருக்கின்றன. நான் பணிபுரிந்த நிறுவனம் பாகுபாடுக்கு எதிரான தீவிரமான கொள்கைகளைக் கொண்டுள்ளதோடு அதை பற்றி புகாரளிக்கவும் பல்வேறு வழிமுறைகளையும் வகுத்துள்ளது. இருப்பினும் லட்சம் பேருக்கு மேல் உள்ள ஒரு நிறுவனத்தில் நடைமுறையில் அந்த கொள்கைகள் பின்பற்றப்படுகின்றனவா என முறையாக கண்காணிப்பதில்லை. பாதிக்கப்படும் பணியாளரும் பெரும்பாலும் புகாரளிக்கும் தைரியமோ அதற்கான வழிமுறைகள் பற்றிய அறிவோ இல்லாமல் தான் இருக்கிறார். 

© https://www.flickr.com/photos/98896417@N08/9608801326

தனியார் நிறுவனங்களில் வகுப்புவாரி இடஒதுக்கீடு தேவையில்லை என்பது எனது தற்போதைய நிலைப்பாடு. ஆனால் பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் எந்த நிலையிலும் சாதிரீதியாக பாகுபடுத்தப்படாமலிருப்பதை உறுதி செய்யவேண்டும். ஒருகாலத்தில் அரசு பணிகளில் அதீதமாக இருந்த சாதிரீதியான பணி மறுப்பும், பணியின்போது பாகுபாடும் இன்றைய இடஒதுக்கீடு முறைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றென்பது நினைவிலிருக்கட்டும். நீங்கள் விதிமுறைகளின் மறைவிடங்களை பயன்படுத்தி உங்கள் இனத்தாருக்கு செய்யும் சலுகைகளின் தாக்கம் என்றைக்கு வெடித்துக் கிளம்புகிறதோ அன்றைக்கு தனியாரிலும் இடஒதுக்கீடு கட்டாயமாக்கப்படலாம்.

சாதிப்பகுபாட்டைச் சார்ந்த சலுகைகளைப்போலவே இடஒதுக்கீடும் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு சோம்பேறிகளையும் அறிவிலிகளையும் மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் அதற்காக, சமூகநீதியானது 20% கூட நிலைநாட்டப்படாத இக்காலகட்டத்தில் இடஒதுக்கீடை நீக்கிவிடமுடியாது. 

ஒரு பெருநிறுவனத்தில் மத்திய மற்றும் உயர்மத்திய மேலாண்மை வர்க்கம் பாதி அளவுக்கும் மேல் குறிப்பிட்ட சாதியினராகவே இருப்பதற்குப் பேர் தான் "diversity"யா? ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொன்றுக்கு தாவிய பின் அங்கும் தனக்கு வேண்டியவர்களையும்,தன் இனத்தாரையும் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இழுத்துக்கொள்வதற்க்கு பேர் தான் "meritocracy" யா? இந்த முறைகேடுகளை உயர் மேலாண்மை வர்க்கம் கண்டும் காணாமல் இருப்பதற்கு பேர் தான் "transparency" யா?

ஆண்டு இறுதியில் பணிமதிப்பீடு செய்வதிலும், விசாவிற்கு பரிந்துரைப்பதிலும் மட்டுமின்றி பணியாளர்களை அங்கீகரிப்பதிலும் கூட திட்டமிட்டு பாகுபாட்டை செயல்படுத்தும் இந்த மேலாளர்களை நேர்மையான விசாரணைக்கு உட்படுத்தும் பொறுப்பு யாருக்கு உள்ளது?

நெருக்கடி நிலை: சில புரிதல்கள் -

முதல் நெருக்கடி நிலையை கொண்டுவந்தவர் நேரு!

1975ல் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்தபோது அவர் தனது அமைச்சரவையிடம் கூட விவாதிக்கவில்லை. தன்னிச்சையாக அவர் அனுப்பிய தீர்மானத்தின் அடிப்படையில் அப்போதைய குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். பிரகடனத்திற்கு பிறகு தான் அமைச்சரவைக்கே தெரியவந்தது. அதனால்தான் பின்னர் வந்த ஜனதா அரசு 44வது அரசியலமைப்பு திருத்தத்தில் (1978) நெருக்கடி நிலை பிரகடனத்திற்கு அமைச்சரவையின் எழுத்துபூர்வ ஒப்புதலை கட்டாயமாக்கியது.


1977ல் நெருக்கடி நிலையை விலக்கி இந்திரா காந்தி நடத்திய நாடாளுமன்ற தேர்தலில் அவரை பதவியில் இறக்கிய மக்கள், மொரார்ஜி தேசாயின் தலைமையில் ஜனதா கட்சியை ஆட்சியில் அமர்த்தினர். நெருக்கடி நிலையின் போது கொண்டுவரப்பட்ட பெரும்பாலான சட்டங்களும், அரசாணைகளும் ரத்துசெய்யபட்டன. அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் பல திரும்பப்பெறப்பட்டன. முக்கியமாக, நெருக்கடி நிலையைப் பற்றிய பகுதி 18ல் பல சட்டப்பிரிவுகள் மாற்றங்களுக்கு உள்ளாயின.

பொதுவாக தேசிய அவசர நிலைக்கு மூன்று காரணிகளை வரையறுத்திருக்கிறது நமது அரசியலமைப்பின் 352வது சட்டப்பிரிவு: போர் (War), அந்நிய ஆக்கிரமிப்பு (External Aggregation), மற்றும் உள்நாட்டுக் குழப்பம் (Internal Disturbance). இந்த மூன்றாவது காரணியைத்தான் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி நாட்டை தன் கட்டுக்குள் கொண்டுவந்தார் இந்திரா. அதோடு தான் கொண்டு வந்த 38வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலமாக அவசர நிலையை கேள்விக்குள்ளாக்கும் நீதித்துறையின் அதிகாரத்தையும் பறித்தார். அமலில் இருக்கும் அவசர நிலை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக்கோரி யாரும் நீதிமன்றத்தை அணுகமுடியாது. பின்னர் வந்த 44வது திருத்தத்தில் நீதிமன்றங்களுக்கு அந்த அதிகாரம் மீண்டும் வழங்கப்பட்டது.

இப்படியாக, நெருக்கடியை எளிதாக அமல்படுத்த வகைசெய்யும் பல்வேறு அரசியலமைப்பு பிரிவுகளையும், அவற்றை தனக்கு இன்னும் அதிக சாதகமாக்கிக்கொள்ள இந்திரா காந்தி கொண்டு வந்த பல்வேறு திருத்தங்களையும் ஜனதா அரசு 44வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலமாக நீக்கவும், திருத்தவும் செய்தது. மிகவும் முத்தாய்ப்பாக, இந்திரா தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட "உள்நாட்டுக் குழப்பம்" என்னும் பதத்தையே நீக்கி, அதற்கு மாற்றாக "ஆயுதக் கிளர்ச்சி" (Armed Rebellion) என்னும் காரணியைச் சேர்த்தது. ஒருவேளை 44வது திருத்தம் மட்டும் மேற்கொள்ளப்படாமல் இருந்திருந்தால் 1975க்குப்பின் இரண்டு நெருக்கடி நிலைகளையாவது கண்டிருப்போம்.

இன்றைய காலகட்டத்தில் ஆயுதக்குழுக்களின் போராட்டங்களை, குறிப்பாக மாவோயிஸ்டுகளின் தாக்குதல்களை காரணம் காட்டி மத்திய அரசால் அவசர நிலையை அமல்படுத்த முடியும். அது தான் அதிகபட்ச வாய்ப்பு. ஆனால் அதை உச்சநீதிமன்றம் கேள்விக்குளாக்கலாம்; வலுவான/சரியான காரணம் இல்லையென்று கூறி அவசர நிலையையே ரத்துசெய்துகூட உத்தரவிடலாம்.

போர் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் நெருக்கடி நிலை அறிவிக்கப்படுவது இயல்பான ஒன்றுதான். நேருவின் ஆட்சியில், 1962ல் சீன ஆக்கிரமிப்பின் போது முதன்முதலில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. அப்போதெல்லாம் பெரிய கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. அது 1968 வரை அமலில் இருந்ததால் 1965ல் பாகிஸ்தானுடனான போரின் போது புதிதாக அவசர நிலை அறிவிக்கப்படவில்லை. ஆனால் அவ்வாறு அறிவிக்க சட்டத்தில் வழியிருக்கிறது.

அதனால் தான் 1971ல் பாகிஸ்தானுடனான போரினால் அறிவிக்கப்பட்ட 2வது அவசர நிலை அமலில் இருக்கும்போதே, 1975ல் 3வது அவசர நிலையை அறிவிக்கமுடிந்தது. இரண்டும் சேர்த்தே 1977ல் ரத்துசெய்யபட்டன. 1975-77ல் அரசு எடுத்துக்கொண்ட வரம்பற்ற அதிகாரத்தினாலும், அடிப்படை உரிமைகள் மீதான கட்டுப்பாடுகளாலும் இன்று நெருக்கடி நிலை என்றாலே இந்திரா காந்தி மட்டுமே ஞாபகத்திற்கு வருகிறார். நாட்டை உள்நாட்டு/வெளிநாட்டு ஆபத்துக்களிலிருந்து காக்கவே அரசியலமைப்பு இந்த வழிமுறைகளை வகுத்துள்ளது என்பதே மறந்துபோய் அதிகார குவிமயத்துக்கு மட்டுமே பயன்படுவதாக அதன் இன்றைய அர்த்தம் மாறி நிற்கிறது.

ஒரு பேச்சுக்கு தனக்கு ஒத்துவராத மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்க மத்திய அரசு நினைத்தாலும், இருக்கவே இருக்கிறது 356வது பிரிவு. ஒரு மாநிலத்தில் அரசியலமைப்பு ஆட்சிமுறை தோல்வியடையும் பட்சத்தில் அங்கு தன்னுடைய ஆட்சியை நேரடியாக செலுத்துவதற்கு அரசியலமைப்பின் 356வது பிரிவு அதிகாரமளிக்கிறது. ( "நெருக்கடி/அவசர நிலை" (Emergency) என்ற சொல்லே 356வது பிரிவின் மூலத்தில் பயன்படுத்தப்படவில்லை. பழக்கத்தின் காரணமாக் நாம் தான் "ஜனாதிபதி ஆட்சி/ மாநிலத்தில் அவரச நிலை" என்று கூறிக்கொள்கிறோம்.)

352வது பிரிவின் படி அறிவிக்கப்படும் தேசிய நெருக்கடியை ஒரு மாதத்திற்குள் நாடாளுமன்றத்தின் சிறப்புப் பெரும்பான்மை (மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு) அங்கீகரிக்கவேண்டும். ஆனால் 356வது பிரிவை அமல்படுத்த சாதாரண பெரும்பான்மையே போதுமானது. 1950 முதல் இப்போது வரை இதை பயன்படுத்தி 100 மாநில அரசுகள் கலைக்கப்பட்டிருக்கின்றன.

எனவே, அத்வானி கிளப்பிவிட்டிருப்பதை போல நெருக்கடி நிலையை கொண்டுவருவது அத்தனை சுலபம் அல்ல - தற்போதிருக்கும் அரசியலமைப்பு பிரிவுகள் தொடரும்பட்சத்தில். அத்தோடு அது தேவையுமல்ல. பரந்துபட்ட அதிகாரத்தை அளிக்கும் நாடாளுமன்றத்தின் அவையொன்றில் பெரும்பான்மையும், அந்த நாடாளுமன்றத்தையே சமயங்களில் குறுக்குவழிகளில் கடக்க அவசர சட்டங்களும் இருக்கும்போது எதற்கு வீணாக ஒரு நெருக்கடி நிலை?